Thursday, 21 April 2011

நாம்ப மட்டும் யோக்கியமா?

தேர்தல் களத்தில் அன்றாடம் அரங்கேறி வந்த அசியற் பகடிகளை கண்டு கேட்டு உண்டு உயிர்த்து நமக்கிதுவோர் உவப்பான சீசன் கேளிக்கையாக மாறிவிட்ட காலமிது! ஆட்சியதிகாரத்திலிருந்த கட்சிகள் அவற்றின் அதிகா ர துஷ்பிரயோகங்கள், மலினமான ஊழல்கள் குறித்த விமர்சனங்கள் விளம்பிச் சொல்லப்பட்ட உண்மைகள் நாகரீமற்ற வசைமாரிகள் என அபேட்சகர்கள் எதிர் தரப்பினரை வாய் ஓய பேசியது ஒருபக்கம் கிடக்கட்டும். சனங்களுக்கு உடல் பொருள் ஆவி ஈந்து தொண்டூழியம் புரிய வந்தவர்களை நிந்திக்கும் முன்பதாக பாமர மக்களாகிய நாம் நமது யோக்கிதாம்சங்களை பற்றியொரு மீளாய்வு செய்து கொள்வது அவசியமாகிறது.
அரசியல் சாக்கடையில் புரண்டு உழலும் முறுவிகள் நம் மலத்தை புசித்து பசியாறும்படி வாட்டமாக குந்தி பேண்டுவிட்டு மற்றாங்கே நறவலை திங்க வந்த டாக் நம் கிட்னியை கடித்துவிட்டதாக அரற்றி புலம்பலாகாது.
மானமுள்ள தமிழர்களாகிய நமக்கு சொல்லாததையும் செய்யும்படிக்கு மக்கள் பிரதிநிதிகள் அள்ளி தருகின்ற இலவசங்கள் பற்றி எதாவது ஒரு மார்க் கேள்வியாகிலும் உள்ளதா?
ஊர்புறத்தில் வாரவட்டி மாதவட்டிக்கு கடன் வாங்கியிருந்தாலும் மூன்றாம் நபருக்கு தெரியாமல் அதை திருப்பியடைக்கும் நாணயஸ்தர்கள் தாமே யாம்? லட்ச உரூவா லோன்களை தள்ளுபடி செய்கிறார்களே...... நாம் பட்ட மொள்ளையை தீர்க்க இவர்கள் ஆர்? நம் அப்பனுக்கு பிறந்த பங்காளிகளா? ஒரம்பரை சரம்பரையாக போன பெண்டு பிள்ளைகளுக்கு உறவு முறையுள்ள யாராகிலும் ஒரு பிட்டு ஜாக்கிட்டு துண்டு எடுத்து கொடுத்தாலும் மனம் ஒம்பாத மான ரோசக்கார மச்சான்ஸ்! இலவச அரிசி வாங்கி, இலவச கிரைண்டரில் மாவரைத்து, இலவச கியாஸ் அடுப்பில் புட்டு சுட்டு, இலவச மிக்சியில் கடுப்பான் அரைத்து, இலவச மின்விசிறியை சுழலவிட்டு இலவச வீட்டு மனையில் நம் களிதீர்க்க பெற்ற இலவச டீ.வி பொட்டி முன்பதாக உட்கார்ந்து கலா ஆண்ட்டி வழங்கும் மானாட மயிலாட பார்த்து ரசித்து ......... பின் உண்டது செரிக்காமல் நோக்காடு பட்டால் இலவச மருத்துவ சிகிச்சை! இன்றியமையாத கல்யாணம் முடிக்க பணம், தாலி இலவசம்! முயங்குதல் ஒரு வேலை! அது முடிந்தால் கருவே உருவாகி உருவே பிண்டமாகி குழந்தை ஜனிக்க பேறுகால உதவி இருபதாயிரம்! பிள்ளைகள் பயில இலவச பஸ் பாஸ்? கிழடு கட்டைகளுக்கு இலவச அரவணைப்பு மையம்! இப்படி ஓசியில் மங்களம் பாடி பிழைக்கிறோமே நம் உடம்பில் ஓடுவது ரத்தமா? சீழா? மக்கள் குறிப்பறிந்து தொண்டாற்றும் மகானுபாவர்களை பற்றி டூத் மேல் டாங்க்கை போட்டு அவதூறு சொல்வது இருக்கட்டும்!
பிரதான சாலைகளில் நின்று சோதிக்கும் சி.ஆர்.எப் போலிசுகளுக்கு அல்வா கொடுத்துவிட்டு குறுக்கு தடத்தில் நூற்றியெட்டில் வந்து ஒன்றியம்,வட்டம் மாவட்டங்கள் தந்த பணத்தை கை கூசாமல் ஏந்தி பெற்று நன்றி மறக்காது சாதி பார்த்து வாக்களித்து வருகிறோமே?
நாம்ப மட்டும் யோக்கியமா?

No comments: